என்னைப்பற்றி

பார்வையற்ற ஒரு பறவையின் தேடல் போன்று தான் நானும் நகர்ந்து கொண்டிருக்கிறேன் மரக்கிளையோ கான்கிரேட் சுவரோ, எனது இறகு சோர்வடையும் போது இளைப்பார ஒரு இடம் அவ்வளவு தான்.

என் வீட்டுக்கதவு நிலைக்கும் நீண்ட திண்ணைக்குமான இடைவெளியில் என் கையெழுத்து அழகாக வேண்டுமென்று தான் பீடி சுற்றிக்கொண்டிருக்கும் போதே அருகில் வைத்து தான் எழுத வைப்பாள் எழுத்து அழகாக இல்லையென்றால் கத்தரியால் மணிக்கட்டில் அம்மா அடித்தக்காட்சி நினைவிருக்கிறது.

ஒரு பென்சில் டப்பா முழுவதும் கலர் ஸ்கெட்ச் ஒரு கோடு போட்ட நோட்டில் வரைந்த பகத்சிங் வீரபாண்டியகட்டபொம்மன் ஓவியமும் அதற்கு நான் கொடுத்த காபி நிறமும் இன்றும் விழிகளிலிருந்து அகலவில்லை.

விபத்து என்பதா அடுத்த கட்டம் என்பதா என்று தெரியவில்லை கவிதை என்ற பெயரில் நான் நுழைய ஆரம்பித்தது எனது எட்டாம் வகுப்பிலிருந்து இன்றும் இன்னமும் நீளும் என்ற நம்பிக்கையில் பயணிக்கிறேன். விளையாட்டு பொழுதுபோக்கு என நாட்கள் கழிந்ததே தவிர எந்த ஒரு புத்தகவாசிப்பிலும் அமராததை இன்று, வருந்துமளவிற்கு கொண்டுவந்திருக்கிறது தமிழின் ஆளுமை.

என் கல்லூரி கால கிறுக்கல்கள் நிறைந்த ஒரு நோட்டு ஒன்று தொலைந்துவிட்டதாக எண்ணிக்கொண்டிருந்த வேளையில் சென்னையிலிருந்து ஒருமுறை வீடு வந்திருந்தேன். ஏதோ ஒரு காரணத்திற்காக பீரோவின் உள்அறையை திறக்கும்பொழுது என் அம்மா பத்திரப்படுத்தி வைத்திருந்தது எனக்கு ஒரு பெரும் வியப்பை தந்தது. அம்மா அனைத்து கவிதைகளும் படித்திருக்கக்கூடும். காதலும் காமமும் ஆட்சி செய்த காலம் அது!

கவிதை கவிதை என என் வாழ்க்கையை தொலைத்துவிடுவேனோ என் தாய் பயந்தது எனக்குத்தெரியும் அதையும் தாண்டி என் நோட்டினை எதுவும் செய்யாமல் வைத்திருந்ததை இன்று நினைக்கையில் என் தாய் என் அப்பாவிடம் எவ்வளவு சிலாகித்திருப்பாள் என்று நினைக்க முடிகிறதே தவிர அனுமானிக்க முடியவில்லை, ஆக என் உணர்வுகளை என் தாய் புரிந்திருக்கிறாள் என்று எண்ணுகையில் உள்ளம் மகிழ்கிறேன் ஒரு வேளை அது கிழிக்கப்பட்டிருந்தால் "என்னைப்பற்றி" என்றோரு பக்கமோ கவிதையோ இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.

நான் எழுதுவதை சுத்தமாய் வெறுக்கும் எனது அப்பா கடந்தமுறை(ஆகஸ்டு 2012) ஊருக்கு போன போது குங்குமத்தில் எனது கவிதை இதுவரை 7முறை வந்திருக்கிறது என்று சொன்னேன் எப்படியோ உன் வாழ்க்கையில் நல்லா இருந்தா சரிப்பா என்று சொல்வது போலிருந்தது அப்பாவின் கண்கள்.

என்னளவில் ஒரு பெரும் குழப்பம் இருந்தது நான் என்பவன் யார் எனது கவிதை நடை என்னவென்று ஒரு அச்சமும் மேலோங்கியிருந்தது. என்னை வளர்த்தெடுத்தவர்கள் நீ உணர்வுகளை எழுதுகிறாய் என்று சொன்னாலும் என் குடும்பத்தில் எவருமே எழுத்துலகில் இல்லாத நிலையில் நான் மட்டும் எப்படி என்ற யோசனை வெகு காலமாகவே இருந்துவந்த ஒன்று.

சமீபத்தில் அக்கா ஒருவர் உங்க வீட்ல ரொம்ப பாசமா இருப்பாங்களா என்று கேட்டார் ஆமா என்று என் அப்பா அம்மாவின் புகழ் பாடிக்கொண்டிருந்தேன். "அதான பாத்தேன் அதுனால தான் உன்னால் உணர்வுகள இப்படி எழுத முடியுது" என்று எனது புதிரை உடைத்தார். அவருக்கு என் நன்றி!

கவிதையெனும் வித்து விழுந்த இடமாக என் அப்பா அம்மா அன்பென அறிந்து கொண்டேன் அந்த அன்பு இல்லாமல் போயிருந்தால் பெ.ரமேஷ் MBA என்ற படிப்போடு கடந்திருப்பேன் இன்று கவிதையோ, கிறுக்கலோ அதற்கு முழுக்காரணமாக இருக்கும் என் தாய் தந்தை இருவருக்கும் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்...
நன்றி.

1 comments:

  1. வாழ்த்துகள்டா சின்னு...நீ பெரிய கவிஞனா வரணும்....வாழ்த்துக்கள் மட்டும் இல்ல இந்த நண்பனோட எதிர்பார்ப்பும் இதுதான்....அதே நேரம் வாழ்க்கையையும் கவனி.... :) :) :)

    ReplyDelete